எமது கவனக்குவிவு

உலகளாவிய அரசியற் செயலாட்சியை விரிவுபடுத்தல்

தமிழர் உரிமைக்கான குழுமமானது இலங்கையில் நிலைமாறு நீதிக்காகப் பரிந்துரைத்தல் மற்றும் அதற்கான அனைத்துலக ஆதரவைத் திரட்டுதல் என்ற தனது திட்டத்திற்கு ஆதரவாக, இலங்கையில் நீதிக்கும் பொறுப்புக்கூறலுக்குமான பொறிமுறைகள் இல்லாதிருப்பதுபற்றியும், தண்டனைப்பயமின்மையும், எதேச்சாதிகாரமும், பௌத்த-சிங்கள தேசியவாதமும், இராணுவமயமாக்கலும் பெருகிவருவது பற்றியும் அக்கறை கொண்டுள்ள அரசுகளுடன் தொடர்பாடலை ஏற்படுத்த முனையும். இதுவரையான அனைத்துலக பரிந்துரை முயற்சிகளிலே இத்தகைய அரசுகளுடனான தொடர்பாடல் போதிய அளவு மேற் கொள்ளப்படவில்லை என்பது தமிழர் உரிமைக்கான குழுமத்தின் கணிப்பாகும்.

 

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வரலாற்றுரீதியான உறவும், இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் இந்தியாவிற்கு இருக்கும் நேரடியான பொறுப்பும் சிறப்பாகக் கவனத்தில் கொள்ளப்படவேண்டியன. இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த புவியமைவாலும், இந்தியாவிற்கு அண்மித்த பூகோள அமைவாலும், இலங்கையும் இந்தியாவும் பண்பாடு, பொருளாதாரம், மதம், குமுகம் ஆகிய விடயங்களிலே வரலாறுபூராகவும் நெருக்கத்தைப் பேணிவந்துள்ளன. இலங்கையின் காலனித்துவத்திற்கெதிரான இயக்கத்திற்கு இந்தியா முக்கியமானதொரு கூட்டாளியாக இருந்துள்ளதோடு, இலங்கைக்கு முக்கியமான அணிசேராமை, பன்முகத்துவம், அதிகாரப்பகிர்வு ஆகிய விழுமியங்களைப் போற்றும் நாடாகவும் இந்தியா இருந்துவருகிறது. 1987லே கைச்சாத்திடப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தமானது இலங்கையின் பல்லின பல்மத மக்களைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளதோடு, தமிழர்களின் அபிலாசைகளை மதிக்கும்வகையிலானதொரு அரசமைப்பையும் வலியுறுத்துகிறது. பதின்மூன்றாம் திருத்தச்சட்டத்திற்கான ஆதாரமாக விளங்கியது இலங்கை-இந்திய ஒப்பந்தமே என்பதோடு அரசமைப்புச் சட்டச் சீர்திருத்தங்களையும் அதிகாரப்பகிர்வையும் இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தியும் வருகிறது.

 

இலங்கையிலே நிலைமாறு நீதிக்கான தேவையும், அனைத்து மக்களும் பங்கெடுக்கும்வகையிலான கட்டமைப்பு மாற்றங்களும் அவசியம் என உணர்ந்துள்ள அரசுகளுடன் உலகளாவிய வகையில் தமிழர் உரிமைக்கான குழுமம் பரிந்துரைகளை மேற்கொள்ளும்.

பங்கெடுக்க முன்வாருங்கள்